Wednesday, February 10, 2016

1.35. நிலைப்பதனை(நினைப்பதெல்லாம்)


35. விஷயவதீ  வா
ப்ருவ்ருத்திருத்பன்ன  மனஸ :
ஸ்திதி  நிபந்தினீ   
மனம் நிலைப்படுத்தல்
நிலைத்திருக்கும் பொருளை சிந்தித்திருப்பதாலும் , கட்டுக்கடங்கிய சிந்தனையாலும்
மனத்தை  நிலைப்படுத்தலாம்

நிலைப்பதனை நினைப்பதன்-மேல் த்யானம் ஒன்று-இல்லை
அழிவதையே நினைத்திருந்தால் நினைவும் நிலைப்பதில்லை 
(2)
தொடர்ந்து-அலை நிற்பதில்லை கடலின்-கரையினிலே
அமைதி-நிலை கலைவதில்லை கடலின்-ஆழத்திலே
நிலைப்பதனை நினைப்பதன்-மேல் த்யானம் ஒன்று-இல்லை
அழிவதையே நினைத்திருந்தால் நினைவும் நிலைப்பதில்லை 
(MUSIC)
ஆயிரம் கோவில்-உளது அதில் ஆண்டவன்-சிலையோ பலது 
யாதோ-பெரிது யாதோ-சிறிது என்..றலை..வதில்-பயன் கிடையாது
(2)
தினமும்-ஒன்றை எடுத்துக்கொண்டால் த்யானம்-வருவதில்லை 
*த்யானம்-கொள்ள உன் மனம்-தான் சிவனார் வாழும்-தில்லை
நிலைப்பதனை நினைப்பதன்-மேல் த்யானம் ஒன்று-இல்லை
அழிவதையே நினைத்திருந்தால் அமைதி என்றும்-இல்லை
(MUSIC)
மனதே யாவுக்கும்-தொடக்கம் அந்த மனதே யாவுக்கும்-முடிவும் 
அது-ஓர் அருவம் அதற்கொரு-உருவம் என்பது என்றைக்கும் கிடையாது
(2)
**ஆகையினால் அருவம்-தனை மனதும் உணர்ந்துவிடும்
என்பதனை உணர்ந்துகொண்டால் த்யானம் கூடிவரும்
நிலைப்பதனை நினைப்பதன்-மேல் த்யானம் ஒன்று-இல்லை
அழிவதையே நினைத்திருந்தால் அமைதி என்றும்-இல்லை

*மனமே கோவில் என்று அதைத் தூய்மையாக்கி இஷ்ட ரூபத்தை தெய்வமாக்க த்யானம் கூடும். உள்ளே செல்வதே த்யானம் . நிலைத்த பொருளைக் குறித்து உட்செல்லலே நல்ல பலன் தரும்.  வெளியே இருப்பவை எல்லாம் ( கோவில் உட்பட ) நிலையற்றவை. கோவில் சென்று கும்பிடல், புறச் சின்னங்கள் போன்ற நிலைப்பிலா (Transicent) தன்மையதைத் தாண்டி, நிலைத்ததை நினை.  நிலைத்த த்யானக் கருப்பொருள் உன் மனத்துள் குடியிருக்கும் இறைவனே. அந்த நம்பிக்கையில் நிலைத்திருத்தலே த்யானம். மற்ற எல்லாமும் நிலைத்திருக்கும் திடத் தன்மை அற்றது. முதலில் நம்பிக்கையையே இறைவனாக உருவகப் படுத்தி (கற்பனையின் மூலம்த்யானம் கொள்ளின் காலப் போக்கில் அருவமான ஆன்மக் காட்சி கிட்டும் வழி தானே பிறக்கும்.

கோவில் , புறச் சின்னங்கள், பூஜை புனஸ்காரங்கள் போன்றவைகள் தேவையற்றன என்றோ , குறை பாடு கொண்டவை என்றோ பொருள் கொள்ளற்க. அவைகள் சாதனைக்கு உதவும் சுயக் கட்டுப்பாட்டைப் பெற உதவும் மிகச் சிறந்த சாதனங்களே. கலி கால மனித மனங்களின் கைகளில், அவை  புற நாட்டத்தை அளிக்க வல்லவைகளாய்  மாறக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதால் ,அந்த சாதனங்களினும் மேலாம் , இறைவன் அளித்த சாதனம் , கற்பனை என்ற பெயரில் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது. அந்த கற்பனையைப் பயன்படுத்தி அசையாத நம்பிக்கையே இறைவன் என உருவகப் படுத்தி த்யானம் கொள்ள இறைக் காட்சி கிட்டும். வெளிப் புற செயல்களின் தேவை குறையும். வெளிப்புற இடர்களும் குறையும்.

**பாம்பறியும் பாம்பின் கால், என்பது போல் அருவமாகிய மனதுக்கு அருவத்தை உணர்தலோ , அருவமான இறை நம்பிக்கையை உருவகப் படுத்தி கற்பனை செய்தலோ ,கடினமானது என்றாலும், இயலாதது அல்ல. அது கடினமாகத் தோன்றலே ,மனம் புற வழிச் செல்வதாலேயே. மனம்  புற வழிச் செல்லலை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறோமே அவ்வளவுக்கவ்வளவு நல்லது. அக வழி பாடே த்யான நோக்கத்தினின்றும் பிறழாமல் இருக்க ஏது செய்யும் என்பதே துணிபு.

_______________________________

No comments:

Post a Comment